என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மீ டூ இந்தியா
நீங்கள் தேடியது "மீ டூ இந்தியா"
மீடூ புகார்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய சின்மயி, உண்மை கண்டறியும் சோதனைக்கு தான் தயாராக இருப்பதாக கூறினார். #MeToo #Chinmayi
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் பெசண்ட் நகர் கடற்கரையில் கேஸ்டலெஸ் கலெக்டிவ் என்னும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பறை இசையோடு தொடங்கிய இந்த நிகழ்வில் சினிமா, கலையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். பாடகி சின்மயி பாடல்கள் பாடினார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இந்த விழாவில் பங்கேற்று பாடல்களை பாடியது மிகுந்த மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. இந்த விழாவின் நோக்கமே சமத்துவம் தான். இன்றைய சூழ்நிலையில் இதுபோன்ற விழாக்கள் அவசியம்.
பறை, மேளம், நாதஸ்வரம், தவில் போன்ற பாரம்பர்ய இசையை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த கலைகள் அழியாமல் இருக்கும்.
இந்த விழாவில் மோடி என்ற பெயரை பயன்படுத்த காவல்துறை அனுமதிக்கவில்லை. நாங்கள் லலித் மோடி பற்றி பாடுகிறோம் என்றாலும் விடவில்லை.
மீடூ விவகாரத்தில் சட்டத்தில் மாற்றம் வேண்டும். அரசு சார்பில் குழு அமைக்கப்படும் என்றார்கள். இதுவரை அமைக்கப்படவில்லை. அரசிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை. பாதிக்கப்பட்டோர் பலர் வழக்குபதிவு செய்தும் நடவடிக்கை இல்லை. ‘‘சட்டம் எங்களை கைவிட்டுவிட்ட நிலையில் தான் இருக்கிறோம். டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளேன்’. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சின்மயி கூறும் புகார்கள் உண்மையாக இருந்தால் ஏன் சட்டப்படி புகார் அளிக்கவில்லை என டுவிட்டரில் சிலர் விமர்சித்தனர். வழக்கறிஞர் ஒருவர் ’உண்மை கண்டறியும் சோதனை தான் ஒரே வழி’ என்று கூற ஆத்திரமடைந்த சின்மயி, ’நான் தயார். மீடியாவை வர சொல்லுங்கள்.
ஒரே நேரத்தில் இருவருக்கும் நடக்கட்டும். அப்போது உண்மை தெரியும். கணவரை தவிர நீ யாரிடம் செல்கிறாய் என என்னை கேள்வி கேட்பதை விட்டுவிட்டு, ஆம்பளையாக இருந்தால் ‘உண்மை கண்டறியும் சோதனைக்கு ஏற்பாடு செய்துவிட்டு கால் செய்யுங்கள்’.
இவ்வாறு அவர் கூறினார். #MeToo #Chinmayi
அர்ஜுன் மீது நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறியுள்ள நிலையில், ‘அர்ஜுன் நல்ல மனிதர்’ என்று வழக்கு விசாரணைக்கு ஆஜரான ‘விஸ்மய’ படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன் விளக்கம் அளித்துள்ளார். #MeToo #ArjunSarja
நடிகர் அர்ஜுன் மீது நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறியுள்ளார். இந்த நிலையில், போலீஸ் முன்பு விசாரணைக்கு ஆஜரான ‘விஸ்மய’ படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன் ‘நடிகர் அர்ஜுன் நல்ல மனிதர்’ என்று கூறினார்.
‘விஸ்மய’ (தமிழில் ‘நிபுணன்’ என்ற பெயரில் வெளியானது) படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை சுருதி ஹரிகரன் குற்றம்சாட்டினார். இதுகுறித்து நடிகை சுருதி ஹரிகரன் கொடுத்த புகாரின் பேரில் நடிகர் அர்ஜுன் மீது கப்பன் பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜரான படத்தின் உதவி பெண் இயக்குனர் மோனிகா, நடிகை சுருதி ஹரிகரனின் உதவியாளர் கிரண் ஆகியோர் நடிகை சுருதி ஹரிகரன் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் போலீசாரிடம் விளக்கம் அளித்தனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று நடிகை சுருதி ஹரிகரனின் தோழி யசஸ்வினி கப்பன்பார்க் போலீசார் முன்பு ஆஜரானார். அப்போது, அவர் ‘நடிகர் அர்ஜுன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை சுருதிஹரிகரன் என்னிடம் கூறி கண்ணீர் சிந்தினார்’ என்பன போன்ற விவரங்களை கூறியுள்ளார்.
இதேபோல், ‘விஸ்மய’ படத்தின் இயக்குனர் அருண் வைத்தியநாதன் வழக்கு சம்பந்தமாக நேற்று போலீசார் முன்பு ஆஜரானார். அப்போது, அவர் ‘நடிகர் அர்ஜுன் மீது நடிகை சுருதி ஹரிகரன் தெரிவித்து இருக்கும் பாலியல் குற்றச்சாட்டு பற்றி தனக்கு எதுவும் தெரியாது. நடிகர் அர்ஜுன் அப்படிப்பட்ட நபர் இல்லை. அவர் நல்ல மனிதர். படப்பிடிப்பின்போது நடிகர் அர்ஜுன், நடிகை சுருதி ஹரிகரன் ஆகியோர் நன்றாக பழகினர். படப்பிடிப்புக்கு வெளியே என்ன நடந்தது? என்பது பற்றி நான் அறிந்து கொள்ளவில்லை’ என்று கூறியுள்ளார்.
இதேபோல், படத்தின் தயாரிப்பாளர் உமேசும், ‘படப்பிடிப்பின்போது நடிகை சுருதி ஹரிகரன் கூறுவது போன்று எதுவும் நடந்ததாக தெரியவில்லை. இதுதொடர்பாக என்னிடம் எந்த புகாரும் வரவில்லை’ என்று நேற்று போலீசாரிடம் கூறினார். #MeToo #ArjunSarja #ShruthiHariharan #ArunVaidyanathan #Nibunan #Vismaya
குளியல் அறையில் வைத்து அப்பா வயது நடிகர் கட்டிப்பிடிக்க முயன்றதாக புதுமுக நடிகை பிரெர்னா கண்ணா புகார் தெரிவித்துள்ளார். #MeToo #PrernaKhanna
‘வேறென்ன வேண்டும்’ என்ற திரைப்படம் மூலம் தமிழ்த் திரை உலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் பிரெர்னா கண்ணா.
தெலுங்கு நடிகையான இவர் மீ டூ இயக்கம் பற்றி அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-
நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது ‘ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தேன். படம் வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் வரத் தொடங்கின.
என்னைத் திரையுலகில் வழிநடத்த யாரும் இல்லை. இந்த துறைக்கு நான் புதியவள். ஒருமுறை ஐதராபாத்திலிருந்து ஒரு நடிகர் என்னை அழைத்தார். ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும், ஒரு கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறினார். சிகப்பு நிறச் சேலையில், ஈரமான முடியுடன் 5 நட்சத்திர விடுதிக்கு வரச் சொன்னார்.
என் அம்மாவை உடன் அழைத்துவரக் கூடாது என்பதை வலியுறுத்தி கூறினார். ஆனால் அதிர்ஷ்ட வசமாக நான் என் அம்மாவை அழைத்துச் சென்றேன்.
நாங்கள் அறையில் இருந்தபோது எனது ஐ லைனரை நீக்கச் சொன்னார். ஐ லைனர் இல்லாமல் எனது முகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க விரும்புவதாக கூறினார். நான் கழிவறைக்கு ஐ லைனரை அழிக்கச் சென்றபோது, அந்த நடிகர் என் அம்மாவிடம் முகம் கழுவிவிட்டு வருவதாகக் கூறியுள்ளார்.
நான் என் கண்ணை துடைத்துக் கொண்டிருக்கும் போது, அவர் திடீரென்று கண்ணாடியை நோக்கி என்னைத் தள்ளியபடி கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றார். நான் மிகவும் பயந்துபோய் அவரை தள்ளினேன். இவை அனைத்தும் சில விநாடிகளில் நடந்து முடிந்தன. பின்னர் அவர் என்னை மிரட்டத் தொடங்கினார்.
எனது அப்பாவயதுள்ள ஒருவர் இப்படி நடந்து கொண்டது கவலையும் ஆச்சரியத்தையும் தந்தது. அவருக்கும் ஒரு மகள் இருக்கிறாள்.
தமிழ் சினிமாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இயக்குனர், எனது விவரங்கள் மற்றும் புகைப்படங்களைப் பார்த்த பின்னர் எனது மேனேஜரின் அலுவலகத்துக்குத் தொடர்புகொண்டார்.
நான் அவருடன் இணக்கமாகச் சென்றால் கதாநாயகியாக நடிக்கவைப்பதாக எனது மேனேஜரிடம் வெளிப்படையாகக் கூறியுள்ளார். நான் கோபத்துடன் திட்டி அவரது அலுவலகத்தில் இருந்து வந்தேன்.
பெண்கள் இணக்கமாகப் போவதால்தான் பெரிய படங்களில் பணியாற்றுகின்றனர் என்று சிலர் கூறுகின்றனர். இந்த மனப்போக்கை ஊக்குவிக்க முடியாது.
இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் எனப் பலரும் தற்போது பாலியல் கொடுமைகளுக்கு எதிராக நிற்கின்றனர். ஒரு பெண் தனக்கு ஏற்பட்ட கொடுமையை வெளியில் சொல்வதற்கு முன்னர் மூன்று முறை யோசிப்பாள்.
அப்படி வெளியில் சொல்லும்போது அவளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். மீ டூ இயக்கம் ஒவ்வொரு பாலினத்தவரும் தங்களை அதிகாரம், பணம், செல்வாக்கு ஆகியவற்றின் மூலம் பாலியல் கொடுமைக்கு ஆளாக்குபவர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள உருவாகியுள்ளது. ஆண்களும், ஓரின சேர்க்கை சமூகத்தினரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பேச முன்வர வேண்டும். மீ டூ இயக்கம் பெண்களுக்கானது மட்டுமல்ல ஒவ்வொரு தனிமனிதருக்குமானது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #MeToo #PrernaKhanna
மீ டூ விவகாரம் இந்தியா முழுவதும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இசையமைப்பாளர் அனிருத் ‘மீ டூ’ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். #MeToo #AnirudhRaviChander
இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா மற்றும் தமிழ் பாடகி சின்மயியைத் தொடர்ந்து ‘மீ டூ’ இயக்கம் மூலம் தினந்தோறும் பாலியல் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. திரையுலகம் உட்பட்ட பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் குறும்பட இயக்குனர் லீனா மணிமேகலை, தொலைக்காட்சி தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சினி, நடிகை ஸ்ருதி ஹரிஹரன், அமலாபால், யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலரும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத் ‘மீ டூ’ இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனிருத் தெரிவித்திருப்பதாவது,
`பாலியல் தொல்லைகள் பற்றி பெண்கள் வெளிப்படையாக பேசுவது வரவேற்கத்தக்கது. இந்த விவகாரம் குறித்து பலரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். குற்றச்சாட்டு நிரூபிக்கபட்டால் சம்பந்தப்பட்டவர்களின் உண்மை முகம் வெளிவரும்' என்றார். #MeToo #AnirudhRaviChander
சேலத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனனி ஐயர், மீ டூவை நல்ல விஷயத்துக்காக பயன்படுத்தலாம் என்றார். #MeToo #JananiIyer
சேலத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. பேரணியை மாநகரக் காவல் ஆணையாளர் சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் நடிகர் ‘தாடி’ பாலாஜி, நடிகை ஜனனி மற்றும் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஹெல்மெட் அணிந்தபடி இருசக்கர வாகனம் ஓட்டிப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியின்போது மீ டூ விவகாரம் குறித்து ஜனனியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அப்போது அவர் கூறியதாவது, “மீ டூ விவகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தாமல், செய்தி மற்றும் விளம்பரத்துக்காக மட்டுமல்லாமல் நல்ல விஷயத்துக்காக உபயோகப்படுத்தினால் நன்றாக இருக்கும்.
சினிமா துறையில் மட்டுமில்லாமல் அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்குப் பாலியல் தொந்தரவுகள் உள்ளன. நிறைய பெண்கள் அவர்களுக்கு நடக்கும் பிரச்சினைகளை வெளியில் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்.
சினிமா துறையில் வெளிப்படையாகத் தெரிகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் காலம் கடத்தாமல் உடனே தெரிவிக்க வேண்டும். உடனடியாக வெளியே சொன்னால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்க முடியும்” என்றார். #MeToo #JananiIyer
உண்மை மெதுவாய் பேசும், பொய்கள் புயலாக வீசும் என வைரமுத்துவுக்கு ஆதரவாக, வைரமுத்து எழுதிய பாடலையே மதன்கார்க்கி வெளியிட்ட நிலையில், கபிலன் வைரமுத்துவும் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். #MeToo #Vairamuthu
கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி சில நாட்களுக்கு முன்பு கூறிய பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
சின்மயிக்கு ஆதரவாகவும், வைரமுத்துக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இந்த விவகாரம் குறித்து ஒருமுறை மட்டுமே வைரமுத்து கருத்து தெரிவித்தார். அதில் என் மீதான குற்றச்சாட்டுக்கு காலம் பதில் சொல்லும் என்று கூறி இருந்தார். அதன் பின்னர் பொது நிகழ்ச்சிகள் எதிலும் வைரமுத்து பங்கேற்காமலே உள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு குடும்பத்தினரும் விளக்கம் அளிக்காமலேயே இருந்து வந்தனர்.
இந்த நிலையில் வைரமுத்துவின் மகன்களான மதன் கார்க்கி, கபிலன் ஆகியோர் தந்தை மீதான குற்றச்சாட்டுக்கு திடீரென விளக்கம் அளித்துள்ளனர்.
மதன் கார்க்கி, ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா படத்தில் வைரமுத்து எழுதிய பாடலையே உதாரணமாக சுட்டிக் காட்டியுள்ளார். அது தொடர்பான ஆடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் மதன் கார்க்கி வெளியிட்டுள்ளார். அந்த பாடல் வரிகள் வருமாறு:-
‘‘உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன்பேர் சொல்லும். அன்று ஊரே போற்றும் மனிதன். நீயே நீயடா. பொய்கள் புயல்போல் வீசும். ஆனால் உண்மை மெதுவாய் பேசும். அன்று நீயே வாழ்வில் வெல்வாய். கலங்காதே. கரையாதே. ராமனும் அழுதான் தர்மனும் அழுதான். நீயோ அழவில்லை. உனக்கோ அழிவில்லை.
சிரித்து வரும் சிங்கம் உண்டு. புன்னகைக்கும் புலிகள் உண்டு. உரையாடி உயிர் குடிக்கும் ஓநாயும் உண்டு. பொன்னாடை போர்த்தி விட்டு உன்னாடை அவிழ்ப்பதுண்டு. பூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு. பள்ளத்தில் ஊர் யானை விழுந்தாலும் அதன் உள்ளத்தை வீழ்த்திட முடியாது. கெட்டாலும் நம் தலைவன் இப்போதும் ராஜன். கரையாதே கலங்காதே.’’
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்னொரு மகனான கபிலன் வைரமுத்துவும், தந்தைக்கு ஆதரவாக உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
ஒரு விவாதம் தொடங்கி இத்தனை நாட்களாக ஏன் எதுவும் பேசவில்லை என நண்பர்கள் சிலர் கேட்கலாம். எதையும் விரிவாக எழுதுகிற மனநிலை சில நாட்களாக வாய்க்கவில்லை. அதையும் மீறி இந்தப் பதிவு அவசியமென கருதுகிறேன்.
அப்பாவைத் தமிழர்களின் நிகழ்கால அடையாளங்களில் ஒன்று என்று சிலர் சொல்வதைக் கேட்கும்போது பெருமைப்படுவேன். அது சிலருக்கு அதீதமாக இருக்கலாம். சிலர் மறுக்கலாம். ஆனால் அவர் தன்னம்பிக்கையின் அடையாளம் என்பதை எவராலும் மறுக்கமுடியாது. அவர் பிறக்கும் போதே வெள்ளை ஜிப்பாவோடு பிறக்கவில்லை. பள்ளிக்கு அணிந்து செல்ல மாற்றுச் சீருடை வாங்கும் வசதி அவருக்கு இல்லை. உயர்பள்ளி செல்லும் வரை செருப்பு அணியும் சூழல் இன்றி காட்டிலும் மேட்டிலும் கல்லிலும் முள்ளிலும் நடந்து கல்வி கற்றவர் அவர்.
உண்மை வெல்லட்டும்...@vairamuthu@madhankarkypic.twitter.com/XA9jwRlXBT
— KabilanVairamuthu (@KabilanVai) October 28, 2018
படிக்கும் பிராயத்தில் வறுமையின் காரணமாக வீட்டில் போதிய உணவில்லாத காரணத்தால் தோட்டத்தில் இருந்தத் தக்காளிகளைப் பறித்துத் தின்று விட்டு பரீட்சை எழுதப் போனவரைப் பற்றித் தெரியாது. கல்லூரியில் வெறும் 150 ரூபாய் கட்டணம் செலுத்த அவர் எத்தனை ஊர்களுக்கு கடன் கேட்கச் சென்றார் என்ற அவமானம் தெரியாது.
அப்பாவும், அம்மாவும் தங்கள் காதல் திருமணத்திற்கு பிறகு சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு மின் விசிறி கூட இல்லாத வாடகை வீட்டில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியது தெரியாது. தமிழ்க் கவிஞராக ஒருவர். தமிழ் பேராசிரியராக ஒருவர் என இருவருமே தமிழோடு தமிழாகி அந்தத் தமிழின் தொட்டிலில் இரண்டு குழந்தைகளை வளர்த்த வரலாறு தெரியாது.
அவரது எழுத்தைப் பற்றி வெளிவராத ஆய்வுகள் இல்லை. அவை பெறாத விருதுகள் இல்லை. ஆனால் அவரது எழுத்தை விட வாழ்க்கை பெருமை வாய்ந்தது.
தற்போது அவர் மீது சுமத்தப்படும் பழிகளுக்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். அப்படி இல்லை என்று சிலர் வாதாடுகிறார்கள். அது எப்படியும் இருக்கட்டும். அவை சட்டரீதியாக பதிவாகட்டும். உண்மை வெல்லட்டும். இந்தப் பிரச்சினையை பொழுதுபோக்காகச் சித்தரித்து பல பிரச்சினைகளில் இருந்து நம்மை முற்றிலும் திசை திருப்பும் முயற்சிகளுக்கு யாரும் இடம் கொடுக்க வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MeToo #Vairamuthu #MadhanKarky #KabilanVairamuthu
மீ டூ விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், சினிமாவில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்த நடிகர் சங்க செயற்குழு கூட்டம் இன்று கூடவிருக்கிறது. #MeToo #NadigarSangam
மீடூ என்ற இயக்கம் மூலம் பெண்கள் தங்களுக்கு பணியிடங்களிலோ, வெளியிலோ நிகழ்ந்த பாலியல் தொந்தரவுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். உலகம் முழுக்க பிரபலமான இந்த மீடூ இயக்கம், கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் புகாரால் தமிழ்நாட்டிலும் பிரபலமானது. மேலும் அமலாபால் உள்ளிட்ட சில நடிகைகளும் தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகளை பகிரங்கமாக சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.
இந்த விவகாரம் பரபரப்பாகி சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா? என்னும் அளவிற்கு சென்று இருப்பதால் இந்த விவகாரத்தில் நடிகர் சங்கத்தின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுந்தது.
சண்டக்கோழி 2 பத்திரிகையாளர் சந்திப்பில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷாலிடம் இதுபற்றி கேட்டதற்கு, உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனே கூறினால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறினார். அடுத்த சில நாட்களில் சினிமாவில் பெண்கள் பாதுகாப்புக்காக ஒரு குழு நியமிக்கப்படும் என்று அறிவிப்பு வந்தது.
இன்று மாலை இந்த விஷயம் தொடர்பாக அவசர செயற்குழு கூட்டம் நடிகர் சங்கத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த 2 வாரங்களாக செயற்குழு உறுப்பினர் பூச்சி முருகன் உள்ளிட்டோர் இந்த விஷயத்தில் சட்டபூர்வமான நடவடிக்கைகளை எப்போது எப்படி எடுக்க முடியும் என்று ஆராய்ந்து இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் மூன்று பேர் அடங்கிய ஒரு குழு நியமிக்கப்பட்டு அதன் மூலம் சினிமாவில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிபடுத்த முடிவு செய்துள்ளனர். #MeToo #NadigarSangam
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்து பிரபலமான யாஷிகா ஆனந்த் தானும் பாலியல் தொல்லைகளை சந்தித்திருப்பதாக கூறியுள்ளார். #MeToo #YaashikaAnand
பெண்கள் சினிமா உலகில் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை சமூக வலைதளங்களில், மீ டூ இயக்கத்தின் மூலம் கூறி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் நடித்து பிரபலமான யாஷிகா ஆனந்த் தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். மீ டூ இயக்கத்தை நான் ஆதரிக்கிறேன். எனக்கும் இந்தப் பாலியல் தொல்லை நடந்திருக்கிறது. நான் பட வாய்ப்பு கேட்டு செல்லும் சமயத்தில் எனது ஆடையைச் சரிசெய்வது போலவும், முத்தக் காட்சியில் நடிக்கச் சொல்லித்தருவது போலவும் என்னிடம் சிலர் தவறாக நடந்து கொண்டனர்.
இதுதவிர பொதுவெளியில் என்னை இளைஞர் ஒருவர் பாலியல் ரீதியாகச் சீண்டினார். என் வீடு அருகே இருந்த போலீஸ்காரர் ஒருவர் என்னை பாலியல் ரீதியாக அணுக முயற்சி செய்தார். சில மாதங்களுக்கு முன் சாலையில் நின்ற பெண் ஒருவரிடம் போலீசார் ஒருவர் என்ன ரேட் எனக் கேட்கும் வீடியோ வெளியானது; அந்தப் பெண் நான் தான்” என்றார்.,
இது குறித்து புகார் தெரிவித்திருக்கலாமே என்று கேட்டதற்கு, “காவல் துறையிலும் சில மோசமானவர்கள் இருக்கிறார்கள். சில போலீசார் கூட என்னைத் தவறான கண்ணோட்டத்தில்தான் பார்த்தனர். பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளைத் துணிந்து வெளியில் சொல்லி தவறானவர்களை அடையாளம் காட்டும்போதுதான், பாலியல் தொல்லைகள் குறையும்” என்றும் கூறியுள்ளார். #MeToo #YaashikaAnand
அறியாத வயதில் பள்ளி படிக்கும் போது, தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து மனம்திறந்த சுனைனா, சம்பந்தபட்டவரை சட்டை காலரை பிடித்து கேட்க வேண்டும் என்று கூறினார். #MeToo #Sunanina
காதலில் விழுந்தேன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், திருத்தணி, நீர்ப்பறவை, தெறி, சமர், கவலை வேண்டாம், காளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இணைய தொடர்களில் நடித்து வருகிறார். மேலும் சமுத்திரக்கனியின் சில்லுகருப்பட்டி படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
நடிகைகள் மீ டூ வில் பாலியல் தொல்லைகள் பகிர்ந்து வரும் நிலையில் சுனைனாவும் தனக்கு ஏற்பட்ட தொல்லை குறித்து மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
‘‘எனக்கு அப்போது 12 வயது இருக்கும். தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் செல்வேன். ஆட்டோ ஓட்டுநர் அருகில் அமர்ந்து செல்ல மாணவர்களுக்குள் போட்டி இருக்கும். ஆனால் அந்த டிரைவர் என்னை மட்டும் அருகில் உட்கார வைத்துக்கொள்வார். அதை பெருமையாக நினைப்பேன்.
அவர் அருகில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தபடி செல்வேன். அப்போது அந்த டிரைவர் வெளியே சொல்ல முடியாத சில்மிஷங்கள் செய்வார். அவரது செயல் அப்போது எனக்கு புரியவில்லை. இப்படி 10-ம் வகுப்பு படித்து முடிக்கும்வரை அந்த டிரைவர் எனக்கு தொல்லை கொடுத்தார்.
ஒரு கட்டத்தில் எனக்கு புரிந்தது. உடனே ஓட்டுநர் மீது கோபம் வந்தது. எனக்கு நேர்ந்த கொடுமையை வீட்டில் சொல்லவில்லை.இப்போது அந்த டிரைவரை தேடுகிறேன். அவன் சட்டை காலரை பிடித்து ஏன் இப்படி செய்தாய் என்று கேட்க ஆத்திரத்தோடு இருக்கிறேன்.’’
என்று சுனைனா கூறினார். #MeToo #Sunanina
‘மீ டூ’வில் நடிகர் அர்ஜுன் மீது நடிகை சுருதிஹரிகரன் பாலியல் புகார் கூறிய நிலையில், சுருதி விளம்பரத்துக்காக பொய் சொல்வதாக அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா கண்டனம் தெரிவித்துள்ளார். #MeToo #ArjunSarja #ShruthiHariharan
கன்னட நடிகை சுருதி ஹரிஹரன் நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த புகாருக்கு அர்ஜுன் மகளும். நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
எதன் அடிப்படையில் என் தந்தை மீது சுருதி பாலியல் புகார் கூறுகிறார். நானும் ஒரு நடிகைதான். எனக்கு அனுபவம் மிகக் குறைவுதான். ஆனால் படத்தில் காதல் காட்சிகள் படமாக்கப்படும்போது என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியும். என் தந்தை இயக்கிய ஒரு படத்தில் நான் நடித்திருக்கிறேன்.
காதல் காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை உதவி இயக்குனருடன் சேர்ந்து என் தந்தை எனக்கு நடித்துக் காண்பித்தார். உதவி இயக்குனருடன் அன்று அவர் நெருக்கமாக நடித்ததால் அந்த நபர் வெளியே வந்து அர்ஜூன் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று சொல்ல முடியுமா?.
இவையெல்லாமே நடிகர், நடிகையரின் வேலையில் ஒரு பகுதியாகும். அத்தனை பேர் முன்னிலையில் என் தந்தை எப்படி அத்துமீறி இருக்க முடியும். அப்படி என் தந்தை தவறு செய்திருந்தால் படப்பிடிப்பின் போதே சொல்லியிருக்கலாமே.
என் தந்தை இரவு விருந்துக்கு அழைத்ததாக சுருதி சொல்கிறார். அதற்கெல்லாம் என் தந்தைக்கு ஏது நேரம். அவர் பப்புக்கோ, வேறு சொகுசு விடுதிகளுக்கோ போவதே கிடையாது. விஸ்மயா படம் குறித்து என்னிடமும் என் சகோதரியிடமும் என் தந்தை பேசிக்கொண்டிருந்தபோது படத்தில் நெருக்கமான காட்சிகள் இருப்பதாக இயக்குனர் கூறியதாகச் சொன்னார்.
மேலும் அந்தக் காட்சிகளை குறைக்குமாறு சொல்லியிருப்பதாகவும் கூறினார். சுருதி முன்வைத்துள்ள அர்த்தமற்ற புகாரால் என் தந்தை அவரை நினைத்து வருத்தப்படவில்லை. எங்களை நினைத்தும் எங்கள் மனநிலையை நினைத்தும் தான் வருந்துகிறார். பாலியல் துன்புறுத்தல் என்பது மிகவும் வலுவான வார்த்தை. சுருதி அதைப் பயன்படுத்துவதற்கு முன் யோசித்திருக்க வேண்டும்.
ஒரு பெண்ணாக மீடூ என்னும் இயக்கத்தை நான் மதிக்கிறேன். ஆனால் சுருதி போன்றவர்கள் விளம்பரத்துக்காக பொய் புகார் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஸ்ருதிக்கு எதிராக என் தந்தை சட்டப்படி கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடர்வார்.
இவ்வாறு அவர் கூறினார். #MeToo #ArjunSarja #ShruthiHariharan #AishwaryaArjun
நடிகை சுருதி ஹரிகரன் கூறியுள்ள பாலியல் புகாருக்கு, நடிகர் அர்ஜூன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் வலியுறுத்தி உள்ளார். #MeToo #ShruthiHariharan #ArjunSarja
நடிகர் அர்ஜூன் கதாநாயகனாக நடித்த படம் ‘நிபுணன்’. இந்த படத்தில் கதாநாயகியாக பெங்களூருவை சேர்ந்த நடிகை சுருதி ஹரிகரன் நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகர் அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று நடிகை சுருதி ஹரிகரன் குற்றம்சாட்டி இருக்கிறார். முன்னணி நடிகரான அர்ஜூன் மீது பாலியல் புகார் எழுந்துள்ள இந்த சம்பவம், சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த பாலியல் புகார் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,
அர்ஜூன் மூத்த நடிகர் என்பதை நாம் மறக்கக்கூடாது. ஆனால் பாலியல் புகார் கூறியுள்ள அந்த பெண், இவ்வளவு நாட்கள் தனக்கு ஏற்பட்ட அவமானம், காயத்தை, தனக்குள்ளேயே புதைத்து வைத்திருந்த வலியை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. தன் மீதான பாலியல் புகாரை அர்ஜூன் புறம்தள்ளினாலும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இது அவரது பெருந்தன்மையை காட்டும்.
பாதிக்கப்பட்ட பெண்கள் இப்போது ‘மீ டூ’ இயக்கத்தை தொடங்கி இருக்கிறார்கள். இது அடுத்து வரும் காலத்தில் பெண்கள் மீது நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு முடிவு கட்டட்டும்.
இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார். #MeToo #ShruthiHariharan #ArjunSarja #Prakashraj
நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறியுள்ள சுருதி ஹரிஹரன் மீது மீது சட்டப்படி கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக அர்ஜுன் தெரிவித்துள்ளார். #MeToo #ArjunSarja #ShruthiHariharan
சமீப காலமாக ‘மீ டூ’ அமைப்பு மூலம் சினிமா பிரபலங்கள் பாலியல் ரீதியாக தங்களுக்கு ஏற்பட்ட தொல்லைகளை வெளி யிட்டு வருகிறார்கள்.
கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியதையடுத்து தற்போது மற்றொரு பிரபல நடிகரான அர்ஜுன் மீது நடிகை சுருதி ஹரிகரன் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். நிபுணன் படத்தில் நடித்த போது நடிகர் அர்ஜுன் தவறாக நடந்து கொண்டதாக சுருதி ஹரிஹரன் தெரிவித்திருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நடிகர் அர்ஜுன் கூறியிருப்பதாவது:-
இந்த புகாரை நான் எதிர்பார்க்கவில்லை. நான் 150 படங்களில் 60 முதல்70 கதாநாயகிகளுடன் நடித்து இருக்கிறேன். ஆனால் யாரும் என்னைப் பார்த்து கையை நீட்டி புகார் கூறியதில்லை.
சுருதி அந்தப் படத்தில் மிகவும் விரும்பி நடித்தார். என்னுடன் பல படங்களில் நடிக்க விரும்புவதாக கூறினார். நான் முழுக்க முழுக்க தொழில் ரீதியான நடிகன். டைரக்டர் விருப்பப் படிதான் நான் அவருடன் நடித்தேன். அதை மீறி நான் நடிக்கவில்லை. இந்த புகார் பற்றி எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எப்படி புரிய வைப்பேன் என்று கவலையாக உள்ளது. சுருதியை நான் ஒரு போதும் விருந்துக்கு அழைத்தது இல்லை. எனவே என் மீது தவறான புகார் கூறிய சுருதி ஹரிகரன் மீது சட்டப்படி கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்.
இந்த புகாரின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.
இவ்வாறு அர்ஜுன் கூறியுள்ளார். #MeToo #ArjunSarja #ShruthiHariharan
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X